#கருப்புவெள்ளைகொலபஸ்குரங்கு (#Colobusguereza)

 கருப்பு வெள்ளை கொலபஸ் குரங்கு (Colobus guereza)

#BlackandWhiteColobusMonkey


        ¶ நீளமான உடலும் பட்டு போன்ற நீளமான முடிகளும் கொண்ட இக்குரங்கின் பெயர் கருப்பு வெள்ளை கொலபஸ் குரங்கு (Black-and-White Colobus Monkey)

        ¶ உடல் முழுவதும் கருப்பு வண்ண முடிகளும்,  முதுகில் வளைந்த U வடிவத்தில் நீளமான வெள்ளை முடிகளும் உள்ளது இக்குரங்கிற்கே உரிய தனிச்சிறப்பு. 

        ¶ இதன் வாலின் நுனியில் இருக்கும் அழகிய வெள்ளை நிற கொத்து முடி இதற்கு மேலும் அழகு கொடுக்கிறது.

       ¶ பதினைந்திற்கும் மேற்பட்ட மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் இக்குரங்குகள் பரவலாக காணப்படுகின்றன. 

       ¶ கொலாபினே(Colobinae) குடும்பத்தைச் சார்ந்த பழைய உலக குரங்குகள்(Old World Monkey) இவை.

வாழிடம்  


       ¶ ஆற்றங்கரையோர அடர்த்தி மிகுந்த காடுகள், மரங்கள் நிறைந்த புல்வெளிகள், முதல் நிலை & இரண்டாம் நிலை காடுகள் இவையே இதன் வாழிடமாகும்.

      ¶ இக்குரங்குகள் மிக புத்திசாலிதனமாக, தேவையான அளவு சக்தியை கொடுக்கும் மரங்களையே தங்குமிடங்களாக தேர்ந்தெடுக்கின்றன.

      ¶ மேலும் ஒட்டுண்ணி தாக்குதல் மற்றும் எதிரிகள் அதன் இடத்தை கணிப்பதை தவிர்ப்பதற்காக அடிக்கடி தங்கும் இடத்தை மாற்றிக் கொண்டே இருக்கின்றன.

உணவு

       ¶ எல்லா கொலாபினே இன குரங்குகளை போலவே இதன் விருப்பமான உணவும் இலைகளே.    

       ¶ இதை தவிர்த்து பூக்கள்,  மரப்பட்டைகள், மூலிகைகளையும் உணவாக உட்கொள்ளும்.

       ¶ மலைகளில் வாழும் கொலபஸ் குரங்குகள் உணவு பற்றாக்குறை உள்ள நேரங்களில் லிச்சென்களை உணவாக உட்கொள்கின்றன.

        ¶ நொதித்தல் மூலமாக இலைகள் ஜீரணிக்கப்படுவதால் இதன் வயிறு பெரிதாக பானை போன்ற தோற்றத்துடன் உள்ளது. 

        ¶ இலைகளில் ஊட்டச்சத்து குறைவாக உள்ளதால் மிக அதிகமான அளவில் இலைகளை உண்ணும்.     

    ¶¶ ¶ அத்தோடு எளிதில் ஜீரணிப்பதற்காக மரக்கரி (Charcoal)-யையும் சிறிதளவு உட்கொள்கின்றன. செரிமானத்தின் போது இக்கரியானது இலைகளில் உள்ள அளவுக்கதிகமான பீனாலிக்ஸை (Phenolics) வெளியேற்றவும், புரதச்சத்தை தக்கவைக்கவும் உதவுகின்றது.

பெயர் காரணம்

       ¶ பழைய உலக குரங்குகளிலேயே பெருவிரல் இல்லாத ஒரே இனம் கொலபஸ் குரங்குகளே. 

       ¶ இதன் காரணமாகவே இதற்கு கொலபஸ் (மாற்றப்பட்ட ஒன்று- Mutilated one/ கிரேக்க வார்த்தை) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

        ¶ இதனை சமன்படுத்துவதற்காக இதன் மற்ற விரல்கள் நீளமாகவும், கொக்கி போல் வளைந்தும் உள்ளது. 

கூட்டம்


      ¶ 3 முதல் 15 குரங்குகள் (ஒரு ஆண் & 8 பெண் குரங்குகள் & குட்டிகள்) சேர்ந்து ஒரு கூட்டமாக வாழும்.

       ¶ ஆறுமாத கர்ப்பகாலத்திற்கு பிறகு அழகான வெள்ளை நிற முடியும் ரோஜா நிற முகமும் கொண்ட ஒரே ஒரு குட்டியை ஈனும்.

       ¶ பிறந்து 6 மாதங்களுக்குப் பிறகே கருப்பு வெள்ளை கொலபஸ் குரங்குகளின் தனித்துவமான நிற வேறுபாட்டை இக்குட்டிகள் அடைகின்றன.    

        ¶¶¶ இந்த அழகிய தோற்றத்தினாலே இக்குட்டிகள் ஆசியாவின் இறைச்சி மற்றும் வளர்ப்பு மிருகங்கள்  சந்தைக்காக அதிக அளவில் வேட்டையாடப்படுகின்றன என்பது வருத்தமான உண்மை.

      ¶ இந்த இனப் பெண் குரங்குகள் இடையே, பெற்றதாய் மட்டுமின்றி அந்தக் கூட்டத்தில் உள்ள அனைத்து பெண் குரங்குகளும் குட்டியை கவனித்துக்கொள்ளும் வளர்ப்புத்தாய் (Allomothering) பழக்கம் உள்ளது.

# கடவுளின் தூதுவர்கள் # 

        ¶ ஆப்பிரிக்காவில் உள்ள காட்டு வாழ் மக்கள் இதனை "கடவுளின் தூதுவர்கள்" என்று அழைக்கின்றனர்.

       ¶ ஏனெனில் இக்குரங்குகள் சூரியன் உதிக்கும் அதிகாலை மற்றும் சூரியன் மறையும் அந்தி மாலைப் பொழுதுகளில் மரங்களின் உச்சிக்கு சென்று அமைதியாக அமர்ந்திருந்து விட்டு அதன் பிறகு மரத்தை விட்டு கீழிறங்குகின்றன.

         சரியான பெயர் தானே சூட்டியிருக்கிறார்கள்

பாதுகாப்பு

     ¶IUCN பட்டியலில் அக்கறை கொண்ட இனங்களில் (Least Concern) உள்ள விலங்கு இது.

இப்பொழுது அதிக அளவில் இவை வேட்டையாடப்படுவதன் காரணங்கள்:

 1. விலங்கு பரிசோதனை

         நம் ஊர் செம்முக குரங்கு(Rhesus macaque)-களைப் போலவே இக்குரங்குகளும் நோய்ப் பரிசோதனைக்கு (விட்டமின் டி குறைபாடு, காச நோய் போன்ற நோய்கள்) பயன்படுத்தபடுகின்றன. 

2. அழகிய முடிக்காக

           # ஆப்பிரிக்கப் பழங்குடிகள் இதன் முடியால் செய்யப்பட்ட தொப்பி அணிவதை பெருமையாக(Ceremonial Hat) கருதுகின்றனர்.      

          # சுற்றுலாப்பயணிகள் இதன் மூடியை அதிக அளவில் விரும்பி வாங்குகின்றனர்.

3.  உணவுக்காக 

          # ஒருகாலத்தில் பழங்குடி மக்கள் மட்டுமே விரும்பி சாப்பிட்ட குரங்கு மாமிசத்தை இன்று நகரத்தில் வாழும் மக்களும் பெருமளவு விரும்பி வாங்குகின்றனர்.

        ¶ கொலபஸ் மட்டுமின்றி பெரும்பாலான ஆப்பிரிக்க காட்டு விலங்குகளுக்கு, காட்டு விலங்கு இறைச்சி (Bush meat/ Wild meat) கலாச்சாரம் இன்று பெரிய சவாலாகவே உள்ளது.  


         நாகரிக மக்களின் ஊடுருவலின்றி, பழங்குடிகள் மட்டுமே பயன்படுத்தியபோது காட்டுயிர்கள் மிக சிறப்பாகவே பாதுகாக்கப்பட்டன என்பதற்கு இந்த "கடவுளின் தூதுவர்களும்" சாட்சியாக உள்ளனர்....!

Dr. P. P. Vanathi Devi,

Zoologist.

Comments

Popular posts from this blog

#பாலிபுலிகள்

#Moeritherium

இளஞ்சிவப்பு தேவதை நல்லங்கு