இளஞ்சிவப்பு தேவதை நல்லங்கு

 #இளஞ்சிவப்புதேவதைநல்லங்கு/ #PinkFairyArmadillo 


           கவசம் அணிந்த தேவதைகளை பார்த்துள்ளீர்களா...? வழுவழுப்பான மஞ்சளும் வெள்ளையும் கலந்த பட்டு போன்ற முடிகளின் மேல், மிகச் சிறிய இளஞ்சிவப்பு நிற கவசத்தை அணிந்துள்ள இந்தக் குட்டி விலங்குகளுக்கு தான் இளஞ்சிவப்பு தேவதை நல்லங்கு (Chlamyphorous truncatus) என்று பெயர். 


            பாலூட்டிகளிலே கவசமணிந்த ஒரே விலங்கினம் நல்லங்குகளே. இவற்றின் பின்புறம் எலும்பாலான தகட்டினால் போர்த்தப்பட்டிருக்கும். ஆபத்து வரும்போது ஒரு பந்தைப் போல சுருண்டு கொள்ளும். நல்லங்குகளில் 9 பேரினங்கள் உள்ளன. அவற்றில் மிகப் பெரியவை அடர் பழுப்பு பெரும் நல்லங்கு (Dark Brown Giant Armadillo). மிகச் சிறியவை நம்முடைய தேவதை நல்லங்குகள்.

             ¶எவ்வளவு சிறியவை தெரியுமா..? நம் உள்ளங்கைக்குள் இந்த குட்டி தேவதைகளை வைத்து ரசிக்கலாம்...!


¶தனித்துவமான குணங்கள்:


             பாலைவனத்தை வாழிடமாக கொண்ட, தனிமையை விரும்பும் இரவு நேர விலங்குகளான இந்த நல்லங்குகள் மத்திய அர்ஜெண்டினாவில் மட்டுமே காணப்படுகின்றன. இதனுடைய அடர்த்தியான முடியானது பாலைவனத்தின் இரவுநேர குளிரை தாங்குவதற்கு உதவுகிறது.

 

            9 முதல் 13 செ. மீ நீளமும் 120 கிராம் எடையும் கொண்டவை இந்த குட்டி தேவதைகள். இதன் மேல் உள்ள கவசம் ஆனது 24 பட்டைகளால் ஆனது. கவசம் உடலுடன் முழுமையாக ஒட்டாத ஒரு நல்லங்கினம் இதுவே. 


             பெரும்பாலான நேரத்தை இவை மணலுக்கு அடியில் உள்ள குழிகளிலேயே கழிக்கின்றன. இதன் காலில் உள்ள இரண்டு பெரிய கூரிய நகங்கள் மணலில் வேகமாக தோண்டுவதற்கு உதவுகின்றன.


¶மணல் நீச்சல் வீரர்கள்( Sand Swimmers):


             இந்தக் குட்டி தேவதைகளின் சாம்ராஜ்யம் தரைக்கு கீழ் உள்ள பகுதிகளே. மணலுக்கு அடியில் ஒரு மீன் நீருக்குள் நீந்தும் அளவு வேகமாக லாவகமாக இவை செல்கின்றன.


¶காப்பு நிலை:


               2006 ஆம் ஆண்டு அருகும் தருவாயில் (Near threatened) உள்ள இனங்கள் நிலையில் ஐயுசிஎன் பட்டியலில் இவ்விலங்குகள் சேர்க்கப்பட்டன. ஆனால் தற்சமயம் மிகச்சிறிய அளவு தரவுகளே கிடைத்துள்ளதாலும், இதனை பார்ப்பது மிக மிக அரிதாக உள்ளதாலும் ஐயுசிஎன் பட்டியலில் போதிய அளவு தரவுகள் பெறப்படாத இனங்கள் (Data Deficient) நிலையில் சேர்க்கப்பட்டுள்ளன.


           இதனுடைய முக்கிய எதிரிகள் வீட்டில் வளர்க்கும் நாய்கள், பூனைகள், காட்டுப்பன்றிகள் மற்றும் மனிதர்கள். 


           இதனுடைய சுவை பன்றி இறைச்சியின் சுவையை ஒத்திருப்பதால், பன்றி இறைச்சியை அதிகமாக விரும்பும் அமெரிக்கர்களின் உணவுக்காக ஒரு காலத்தில் மிக அதிக அளவில் வேட்டையாடப்பட்டன.

 

                மிக மிக மென்மையான விலங்குகள் இவை. உருவத்தில் மட்டுமல்ல குணத்திலும். மிக எளிதாக மன அழுத்தத்திற்கு ஆளாகி விடும். எனவே பாதுகாப்பு கொள்கைகளால் கூட இதனை பாதுகாக்க இயலவில்லை. கூண்டுகளில் வைத்தால் சில மணி நேரங்களிலேயே இறந்து விடும் அளவு மென்மையானவை. 8 நாட்கள் உயிரோடு இருந்ததே, இதுவரை கூண்டில் அதிகபட்சம் உயிரோடு இருந்த நாட்களாகும். 

   

                அனைத்தும் தெரிந்தும் இந்த அழகை, வளர்ப்பு பிராணிகளாக மாற்ற இயலும் மனிதனின் பேராசை சிறிதும் குறையவில்லை. மறுபடி மறுபடி வளர்ப்புப் பிராணிகளாக முயற்சி செய்தே, இயற்கை அன்னையின் கவச உடை தேவதைகளை அழித்து வருகின்றனர்.


Dr. P. P. Vanathi Devi, 

Zoologist


https://m.facebook.com/story.php?story_fbid=3638724392833723&id=100000885937264

Comments

Post a Comment

Popular posts from this blog

#பாலிபுலிகள்

#Moeritherium