#பாலிபுலிகள்

 ஒரு காட்டு ராஜா அழிந்த கதை...!

(#பாலிபுலிகள்/ #BaliTiger)


            இந்தோனீசியதீவு கூட்டத்திலுள்ள பாலி தீவை வாழ்விடமாகக் கொண்ட புலிகள் இவை. பனியுகத்தில் இவை சன்டா தீவுக்கூட்டம்(Sunda Island- மலாய் தீபகற்பம், சுமத்ரா, போர்னியோ, ஜாவா பாலி) முழுமையும் ஆட்சி செய்துள்ளன. அக்காலகட்டத்தில் ஜாவா புலிகளும், பாலி புலிகளும் ஒரே இனமாகவே இருந்துள்ளன. பனியுகத்தின் முடிவில் ஜாவா மற்றும் பாலி தீவுகள் தனித்தனியாக பிரிந்த பின்பே இவை தனித்தனி இனங்களாக மாறியுள்ளன. 

பாலித்தீவு மக்களும் புலிகளும்:

       பாலி தீவு மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தவை இப்புலிகள். மரபுவழி கதைகளும், நம்பிக்கைகளும் பாலி புலிகளை சுற்றியே இன்றும் அங்கு வலம் வருகின்றன. நம்மூரில் புலிப் பல், புலி நகம் அணிவதை போலவே பாலி மக்களும் புலியின் உடல் பாகங்களாலான ஆபரணங்கள் அணிவதை பெருமையாகவும், தங்களுக்கு உடல் வலிமை தரும் விஷயமாகவும் கருதிவந்தனர். 

உருவ அமைப்பு:

        புலி இனங்களிலேயே மிகச்சிறியது இவையே. சைபீரிய புலிகளை விட உருவத்தில் பாதி அளவே இருக்கும் இப்புலிகள் 7 அடி நீளமும் 60 முதல் 75 செ.மீ உயரமும் 90 முதல் 100 கிலோ எடையும் கொண்டவை. பளிச்சென்ற ஆரஞ்சு வண்ணமும், நீளமான கருப்பு வரிகளுக்கு இடையே உள்ள கரும்புள்ளிகளும் பாலி புலிகளுக்கே உரிய தனிச்சிறப்பு. 

உணவு:   

       இதன் முக்கிய உணவு காட்டுப்பன்றி, ருசா மான்கள் காட்டுக் கோழிகள் பாறை உடும்புகள் மற்றும் குரங்குகள். மிகச்சிறந்த வேட்டையாடிகளான பாலி புலிகளால், அவற்றை விட பெரிய மனித வேட்டையாடிகளுடன் போட்டியிட இயலவில்லை என்பதே உண்மை.

அழிவின் காரணங்கள்:

       கடந்த ஒரு நூற்றாண்டில் மட்டும் மூன்று புலி இனங்கள்  இவ்வுலகை விட்டு மறைந்து விட்டன. அதில் முதலில் அழிந்தது பாலி புலிகளே. இன்று நம்மிடம் மிஞ்சி இருப்பதோ பதப்படுத்தப்பட்ட சில தோல்களும், உடல்களும், மண்டை ஓடுகளும் மட்டுமே.


      ¶ பாலித்தீவு அளவில் மிகச் சிறியது. அங்கு மனிதர்களும் குடியேறிய பின்னே ஏற்பட்ட இட நெருக்கடியை புலிகளால் சமாளிக்க இயலவில்லை.      

       ¶பத்தொன்பதாம் நூற்றாண்டில் பாமாயில் உற்பத்திக்காக பனை மரங்கள் வளர்ப்பதற்காக பெருமளவு மரங்கள் இத்தீவில் அழிக்கப்பட்டன. இதனால் உருவான புலி மனித மோதலை தவிர்ப்பதற்காக பெருமளவு புலிகள் கொன்று குவிக்கப்பட்டன.

        ¶ ¶ 1937 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் நாள் மேற்கு பாலியில் இருந்த கடைசி பெண் புலியும் கொல்லப்பட்டது.

பெரும் வேதனை என்னவென்றால் அதன்பிறகும் பலகாலம் அம்மக்கள், மேலும் பல புலிகள் காடுகளுக்குள் மறைந்திருக்கலாம் என்றும், எந்நேரமும் தங்களை தாக்கலாம் என்றும் கருதி வந்ததே.

        இன்று நம் மக்களும் அதேபோன்ற அறியாமையிலேயே காட்டுயிர் மனித மோதலை கருதுகின்றனர் என்பது வருத்தத்திற்குரிய விஷயம்

Dr. P. P. Vanathi Devi, 

Zoologist.


Comments

Popular posts from this blog

#Moeritherium

இளஞ்சிவப்பு தேவதை நல்லங்கு